பெருந் தமிழ் புலவரும் தத்துவ அறிஞருமான திருவள்ளுவரின் படைப்பான திருக்குறளை மையமாக கொண்ட அசைவூட்ட தொடரை [Animation Serial] ஏப்ரல் 5 ஆம் நாள் முதல் காண்பிக்க அமெரிக்காவின் புகழ்பெற்ற டிஸ்னி சிறுவர் தொலைக்காட்சி பிரிவு [ Disney Channel ] முடிவு செய்துள்ளது.
முதலில் இந்தியரில் வெளியாகவுள்ள - மிருகங்களின் உருவை பயன்படுத்தி அசைவூட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு ஏக் தா ஜங்கிள் [Ek Tha Jungle] என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அசைவூட்ட தொடரை சென்னையை சேர்ந்த அக்செல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் [Accel Animation Studios] என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மிகப் பெரும் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியமான திருக்குறளை இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்ப்பதே இந்த தொடரின் நோக்கமாகும் என்று டிஸ்னி தெரிவித்துள்ளது.
உலகத்தில் உள்ள அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்ட பொது மறையான திருக்குறள் - முப்பரிமாண [3D] அசைவூட்ட பாணியில் தற்கால வாழ்க்கைககு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட முதல் அசைவூட்ட காணொலித் தொடராக இருக்கும் என்று டிஸ்னி-யி்ன் இணை இயக்குநர் தேவிகா பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இந்தியர்களின் கதை சொல்லும் கலாச்சாரத்திற்கு உயிரூட்டமாகவும், முற்றிலும் பொழுது போக்கு அம்சங்களை கொண்டதாகவும், அதே நேரத்தில் தற்கால வாழ்க்கைக்குப் பயன்படும் வகையிலும் தாங்கள் அமைத்து வரும் தொடர்களில் இதுவும் ஒன்று என அவர் கூறியுள்ளார்.
இத் தொடர் உலகத்திற்கு பொதுவான கருத்துகளையும் சிறந்த வாழ்க்கைப் பாடங்களையும் வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இத் தொடரின் ஒவ்வொரு கதையும் தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தேவைப்படும் திடமான நெறிமுறைகள், குடும்ப மதிப்பு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நம் வரலாறு , கலாச்சாரம், பண்பாடுகளை விவரிக்கும் கதைகளை இன்றைய நவீன கால இளைய சமுதாயத்திற்கு பயன்படும் வடிவில் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு முயற்சி இது என்றும், இத் தொடரின் ஒவ்வொரு கதையும் திருக்குறளின் ஒவ்வொரு குறளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்கும் என்றும் தேவிகா பிரபு மேலும் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட - குடும்ப மாண்பினை விளக்கும் முதல் தமிழ் இலக்கியம் திருக்குறள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக