யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 8 பேர் சிறைக் காவலாளிகளினால் மோசமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எட்டுப் பேரும் சிறைக் கம்பிகளை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைக் காவலாளிகளால் கடந்த 30 ஆம் திகதி தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத் தாக்குதல் சம்பவம் யாழ்.நீதவானுக்குக் கிடைத்த அநாமதேயக் கடிதத்தின் மூலம் அம்பலமானதாகக் கூறப்பட்டது. சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,யாழ்.சிறைச்சாலையில் உள்ள செல் ஒன்றில் எட்டுக் கைதிகள் ஒன்றாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் எட்டுப் பேரையும் குளியலறைக்கு விடுவதற்காகச் சிறைச்சாலைக் காவலாளிகள் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது சிறைக் காவலாளிகள் அந்தச் செல்லினைச் சோதனை செய்தபோது உடைக்கப்பட்ட நிலையில் யன்னல் கம்பியைக் கண் டுள்ளனர். இதனையடுத்து சிறைக் கைதிகளிடம் விசாரணை செய்தபோது இச் சம்பவத்திற்கும் தமக்கும் எதுவும் கிடையாது என அவர்கள் பதிலளித்துள்ளனர்.
எனினும் அவர்கள் கூறியதை ஏற்க மறுத்த சிறைக் காவலர்கள் எட்டுச் சிறைக் கைதிகளையும் அழைத்துச் சென்று வேறு ஒரு அறையில் பூட்டி நிர்வாணமாக்கித் தாக்கியுள்ளனர். அன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய தாக்குதல்கள் மாலை 6 மணிவரையும் இடம் பெற்றதாகக் கைதி ஒருவர் தெரிவித்துள் ளார். இச் சம்பவம் தொடர்பாக சம்பவ தினத் திலிருந்து மூன்று நாள்களுக்கு எந்தத் தகவல்களும் வெளிவராமல் பாதுகாக்கப்பட் டுள்ளது.
எனினும் இத் தாக்குதல் சம்பவம் தொடர் பில் அநாமதேயக் கடிதம் ஒன்று நேற்று முன் தினம் யாழ்.நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட் டது. இச் சம்பவம் தொடர்பான கடிதத்தை வாசித்த நீதவான் குறிப்பிட்ட கைதிகளை உட னடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு பணிப்புரை விடுத்தார்.
சிறைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் மோசமான உடல் நிலையை அவதானித்த நீதவான் பொலிஸ் பாதுகாப்புடன் அவர்களைச் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான கைதிகளில் ஒருவரின் கை முறிந்துள்ளதாகவும் மற்றவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
படுகாயமடைந்த கைதிகளின் உடல் நிலை நேற்று மோசமாகக் காணப்பட்டதால் இன்று நீதவான் முன்னிலையில் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
இதேவேளை சம்பவம் குறித்துப் பாதிப்படைந்த கைதிகள் தெரிவித்ததாவது,
கடந்த 30 ஆம் திகதியன்று 60 கைதிகள் சிறையில் இருந்தோம். அதில் அறையின் ஓர் மூலையில் நாம் இருந்தபோது கம்பி உடைந்துள்ளது, ஓட முயற்சித்திருக்கின்றீர்களா எனக் கேட்டு விட்டு எம்மை வேறு அறை ஒன்றினுள் கூட்டிச் சென்றனர்.
அங்கு 10 பேர் அடங்கிய தமிழ்ச் சிறைக் காவலர்கள் எம்மைக் கடுமையாகத் தாக்கினர். அத்துடன் நிர்வாணமாக்கிக் கைதி ஒரு வரின் ஆண் உறுப்பில் மிளகாய்த் தூளைப் போட்டும் மற்றைய இரு கைதிகளைப் படுக்க வைத்து சப்பாத்துக் கால்களால் ஏறி மிதித்தனர்.
பைப்புகள், வயர்கள் என்பவற்றால் கடுமையாகத் தாக்கியும் தூசண வார்த்தைகளால் பேசி சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்தனர். அன்றைய தினம் எமது உறவினர்கள் பார்க்க விடுவதனை நிறுத்தி விட்டதுடன் தண்ணீர் தராது மாலை நேரம் மட்டும் சாப்பாடு தந்தார்கள். அதனை நாம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து நீதவான் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள் ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக