செவ்வாய், 23 மார்ச், 2010

வாடகை வீட்டுச் சமாச்சாரம் நீதிபரிபாலனம் தலையிட வேண்டும்

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அதிரடிச் சம்பவங்கள் ஆழ்ந்த கவலையைத் தருகின்றன. தென்பகுதி மக்கள் இலட்சக் கணக்கில் யாழ்ப் பாணத்துக்கு வருகை தருவது, நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கண்காட்சிக்குரிய இடம்போல் கூடுவது, திருவிழாக் காலங்கள் தங்கள் ஜீவனோபாயத்திற்காக சிறுவர்த்தகம் நடத்திய நல்லூர் வளாகத்தில் நடைபாதை வியாபரம் நடத்துவது,

நாவலர் கலாசார மண்டபத்தில் தங்கியிருந்து மதுவும், புலாலும் உண்டு களிப்பது என்ற பல்வகைத் துன்பங்கள் எங்கள் இதயங்களைத் துளைக்கின்றன. இவை ஒருபுறத்தில் நடந்தேற மறுபுறத்தில் தென்பகுதி மக்களின் வருகையோடு கோடிக் கணக்கில் பணம் உழைக்கும் கூட்டமொன்று வாடகை வீட்டில் இருப்பவர்களைத் துரத்தும் மாபாதகத்தைச் செய்கின்றது. மாதக் கணக்கில் வாடகை வேண்டியவர்களுக்கு இப்போது நாள் கணக்கில் வாடகை பெற்றுக் கொள்ள விருப்பம். அதனால் வாடகை வீடுகளில் இருப்பவர்களை மிக மோசமாக நடத்தும் பரிதாபம் நடந்தேறுகின்றது.

இது பற்றி இவ்விடத்தில் முன்னரும் குறிப்பிட்டிருந்தோம். இருந்தும் இது விடயத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேநேரம் வாடகை வீடுகளில் இருப்பவர்களைத் துரத்தும் நடவடிக்கை வேகமெடுத்துள்ளது. எதுவித அவகாசமும் வழங்கப்படாமல், வீட்டின் உரிமையாளர்கள் குடியிருக்கப் போவதாகக் கூறி வாடகைக் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

ஆகவே இது தொடர்பில் நீதி பரிபாலனம் விசேட நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும். அதேசமயம் சர்வதேச அரச சார்பற்ற நிறு வனங்களும் தங்களின் பார்வைக்குள் வாடகைக் குடியிருப்பாளர்களின் அவலங்களை உள்ளீர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

மனித உரிமை மீறல், சிறுவர் உரிமை மீறல், பெண்ணடிமை என்ற பட்டியலில் வீட்டு உரிமையாளர்களால் வாடகை வீட்டிலிருப்போர் நிந்திக் கப்படுதல் என்ற விடயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது தொடர்பில் பாதிக்கப்படுபவர்கள் தரும் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டு விளக்கம், விசாரணை நடத்தும் நடைமுறைக்கு அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள் களம் அமைப்பது உடனடித் தேவையாகும்.

இதற்கு அப்பால் சம்பந்தப்பட்டவர்கள் ‘வாடகை வீட்டில் குடியிருப்போர் சங்கம்’ உருவாக்குவது பற்றிய சிந்திக்கலாம். எதுவாயினும் எந்த வடிவிலும் மனித நிந்தை இந்த மண்ணில் இல்லாதொழிய வேண்டும்.

thanks valampurii news paper 

1 கருத்து:

  1. //குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.//

    எப்படி? வாடகை வீட்டில் இருப்பவர்கள் எப்படி இதை வற்புறுத்தலாம்? பணம் உழைக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது வீட்டு உரிமையாளரின் மனித உரிமை மறுக்கப்படலாகாதா?

    //அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள் களம் அமைப்பது உடனடித் தேவையாகும்.//

    வீடு கட்டிக்கொடுக்கவேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? இலவசம்?

    பதிலளிநீக்கு

கீழே தோன்றும் விளம்பரத்தின் மீது கிளிக்கினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த தளத்தில் பதிவு செய்து நிங்களும் பணம் சம்பாதிக்கலாம்......... sign up and earn 5 doller BuX.ee: You Will Succeed With Us!
Get paid To Promote at any Location

உலக நாடுகளின் நேரங்கள்.....