யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைக்கப்பட்டுள்ள நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக அரசு பிரகடனப்படுத்த உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு யாழ் அரச செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டின் நல்லூர் மற்றும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் உள்ளிட்ட பல வரலாற்றுப் புகழ் மிக்க இந்து ஆலயங்கள் உள்ள போதும் அரசு இவை எவற்றையுமே புனித பிரதேசமாக அறிவித்திருக்கவில்லை.
அரசின் நயினாதீவு நாகவிகாரையை புனித பிரதேசமாக மாற்றும் திட்டமானது யாழ்ப்பாணத்தை சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றும் திட்டத்தின் படிக்கட்டாக அமையும் என அவதானிகள் கருதுகின்றனர்.
ஏற்கனவே வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில் மாதகல் பகுதியிலும் சங்கமித்தை வந்திறங்கியதாக தெரிவித்து விகாரை ஒன்று பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.




தற்போது, நயினாதீவு நாகதீபம் விகாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு ஏதுவாக நில அளவைப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிலஅளவைத் திணைக்களத்திற்கு அரச உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிச் சிங்களத்தில் இது தொடர்பான கடிதம் ஒன்று வேலணைப் பிரதேச செயலகத்தை வந்தடைந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. எனினும் யாழ் குடா நாட்டிலுள்ள அரச அதிகாரிகள் அச்சம் காரணமாக இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க மறுத்து வருகின்றனர்.
இதனைவிடவும் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னிப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றமையும்,  தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.