கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம் , கூட்டமாக விசைப்படகு மூலம் புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர்.
போரினால் தடைப்பட்ட திருவிழா
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால், 1978இல் நிறுத்தப்பட்ட, கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 2001இல் நடந்தது. தொடர்ந்து இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், 2005 வரை நடந்த, அந்தோனியார் திருவிழாவில் மன்னார், நெடுந்தீவு பகுதியிலிருந்தும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
2006இல் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, யுத்தம் உக்கிரமாக நடந்ததால் பாதுகாப்பு கருதி, கச்சத்தீவு திருவிழாவை இலங்கை அரசு நிறுத்தியது.
தற்போது, இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சத்தீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கச்சத்தீவில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை 28ஆம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.
விழாவில் தமிழகத்திலிருந்தும், பக்தர்கள் பங்கேற்க ஆயர் பேரருட்திரு தோமஸ் சௌந்திரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு அருட்திரு. ஞானபிரகாசம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு சூசைமாணிக்கம், ராமேஸ்வரம் வேர்கோட்டு புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை அருட்திரு மைக்கேல்ராஜ் ஆகியோருக்கு இது குறித்து ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
பக்தர்களிடம் கடற்படையினர் சோதனை
இன்று காலை ராமேஸ்வரம் ஒட்டிய பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் மற்றும் அருகில் உள்ள தீவு பகுதி மக்கள் ராமேஸ்வரம் வந்தனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் , குடும்பத்தோடு ஆர்வமாக புறப்பட்டுச் வந்தவண்ணம் உள்ளனர்.
இந்திய, இலங்கை கடற்படையினர் பக்தர்களிடம் சோதனை நடத்துகின்றனர். அடையாள அட்டை முக்கியமாக பரிசோதிக்கப்படுகிறது. 2 நாட்கள் விழாவை முடித்து நாளை மறுநாள் பக்தர்கள் ராமேஸ்வரம் திரும்புவர். விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக