யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியைக் கொழும்பில் நேற்று நேரில் சந்தித்த இந்துமாமன்றத்தின் தூதுக்குழுவினர் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"யாழ். நகரிலிருந்து காங்கேசன்துறை செல்லும் பிரதான வீதியை அகலப்படுத்தி விஸ்தரிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும், இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் நிலையிலிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த விஸ்தரிப்புத் திட்டத்தின்படி இந்தப் பிரதான வீதியிலுள்ள 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசார நினைவுச் சின்னங்களும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து யாழ்.இந்து மக்களும், இந்து நிறுவனங்களும் அதிர்ச்சியடைந்த நிலையில், இது விடயமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மேற்படி வீதி விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நிபுணர்களிடம் பெறுமதியான மாற்றுத் திட்டங்கள் இருப்பதை அறிவதாகவும், அத்தகைய மாற்றுத் திட்டங்களைப் பாவித்து உத்தேச வீதி விஸ்தரிப்புத் திட்டத்தை மாற்றியமைத்து யாழ்.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அந்த மகஜர் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துடனும், யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து இது வியத்தில் நல்ல முடிவு எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக