இறுதி முடிவு யாருக்கு வெற்றி என்று தெரியாத வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போர் ரதீஸன், ஜெனோஸன் ஆகியோரின் இணைப்பாட்டத்தினால் யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போர் 25 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் ஜேம்ஸ் ஜான்ஸன் முதலில் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அதற்கிணங்கக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஹரிவதனன் 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களை எடுத்து இருந்தது.
தொடர்ந்து இன்று மூன்றாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் தொடர்ந்தது. 50 ஓட்டங்களை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எட்ட முதல் மேலும் இரண்டு விக்கெட்களை இழந்தது. 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இருந்த வேளையில் அணித் தலைவர் ஜேம்;ஸ், ஜெரிக் துஸாந்த் ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து வந்தது.
இருவரும் களத்திலிருக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வெற்றி வாய்ப்பு அதிமாகவிருந்தது. எனினும் இருவரும் 41 ஓட்டங்களைப பகிர்ந்த போது ஜேம்ஸ் ஜான்ஸன் 26 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜெரிக் துஸாந்தும் 18 ஓட்டங்களுடன் வெளியேற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு மீண்டும் இக்கட்டான நிலை ஏற்பட்டது.
எனினும் இந்த இக்கட்டான நிலையை தமது நிதானமான துடுப்பாட்டம் மூலம் தகர்த்து எறிந்தது ஜனோஸன் - ரதீஸன் ஜோடி. இறுதி நேரத்தில் ரதீஸன் அதிரடியாக அடித்த ஆறு ஒட்டங்களும், ஜனோஸனின் 3 பவுண்டரிகளும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றன.
இறுதியில் 6 விக்கெட்களை மாத்திரம் இழந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜனோசன் 25 ஓட்டங்களையும், ரதீஸன் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக ஹரிவதனன் 2 விக்கெட்களையும், டக்ஸன், யோகேஸ்வரன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போரில் சிறந்த களத்தடுப்பாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிரணவனும், சிறந்த துடுப்பாட்ட வீரர், சகலதுறை ஆட்டக்காரராக அதே கல்லூரியைச் சேர்ந்த ஹரிவதனனும், சிறந்த பந்துவீச்சாளராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த தர்சனும், போட்டியின் ஆட்டநாயகனாக ஜேம்ஸ் ஜான்ஸனும் தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில்களை போட்டிக்கு அனுசரணை வழங்கிய டயலொக் நிறுவனம் வழங்கியது. இதனைவிட சிறப்புப் பரிசில்களான பணப்பரிசில்களை சமூகநலத்துறை, சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரர்களுக்கு வழங்கினார்.
இவ்வெற்றியின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.