எங்கும் புதுமை; எதிலும் புதுமை என்பதற்கொப்பவே உலக நடப்புகளும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது போன்று தற்கொலையில் ஒரு புதுமை படைத்திருக்கின்றார் ஒருவர்.
எமதர்மராஜனுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விசித்திர சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.
கோவை கடலைக்கார சந்தை என்ற இடத்தைச் சேர்ந்த சேகர் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து புதுமை படைத்திருக்கின்றார். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் இருந்து அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் கடந்த 6 மாத காலமாக தனிமையில் இருந்த சேகர் மன உளைச்சலால், பாதிக்கப்பட்டதாக அக்கம்பக்கத்துத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவுக்கு மேல், கோவை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த மரம் ஒன்றில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை நீதிமன்றத்துக்கு வந்த சிலர், இதை பார்த்து விட்டுக் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் பி4 காவல்நிலைய பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சேகர் தனது சட்டைப் பையில் ஒரு கடிதம் வைத்திருந்தார்.
சேகர் எழுதியிருந்த கடிதத்தில்,
"அனுப்புனர், சேகர், த/பெ. ராமசாமி. பெறுனர், எமதர்மராஜா, த/பெ எமன் அப்பா, எமன் தருமன் வீதி, எமனின் செல்: 000321000, மேல் உலகம். சித்திரகுப்தன் செல் நம்பர்: 944561377.
என்னை பற்றிய மேலும் விபரங்கள் அறிய வேண்டும் என்றால் மேலே எழுதப்பட்டிருக்கும் செல் நம்பருடன் தொடர்பு கொள்ளவும்." என்று எழுதி வைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலுலகத்துக்குக் கடிதம் எழுதிய சேகர், கூடவே தற்கொலைக்கான காரணத்தை கீழுலகத்துக்கும் அறிவித்திருந்தால், காவல்துறையினரின் அசௌகரியங்களைத் தவிர்த்திருக்கலாமே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக