நேற்று முன்தினம் இரவு விஜய் தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி. அதில் தமிழர்களுக் கென்று கலாசாரம் உண்டா என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.நேரத்துக்கு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கத் தெரி யாது. உரிய நேரத்துக்கு சமுகம் கொடுக்கத் தெரியாது. மனித உரிமைகளை பேணவும் மதிக்கவும் பழகவில்லை. குப்பைகளை வீதியில் கொட்டும் குப்பைப் பழக்கம் வேறு.
பொய், களவு, கொலை இவை மேலதிகம். இப்படியிருக்கும் போது தமிழர்களுக்கென கலாசாரம் உண்டெனக் கூறுவது எங்ஙனம் பொருந் துமென ஓர் அன்பர் விளாசித்தள்ளினார்.மேற்குலகின் நேரமுகாமைத்துவம், மனித உரிமை மற்றும் பிறரை மதிக்கும் நேயம், பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாமை, தன் கடமை மீது பற்று, விசுவாசம், திட்டமிடல் ஒழுங்குபடுத்தல் என எத்தனையோ கலாசார உயர்வுகள் அங்குள்ளன, என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எங்களிடம் இருக்கக் கூடியகலைப் படைப்புகள், சிற்ப ஓவியங்கள், ஆலயங்கள், அருங்கலை பொக்கிங்கள் என பட்டிய லிட்ட ஒருவர் இவற்றையயல்லாம் நாம் மறந்து பேசக் கூடாது எனக் கூறினார்.
இந்த விவாதத்தை பார்த்தபோது எங்கள் நினைப்பு வந்தது. எங்களிடம் அவர் கூறியதும் இல்லை. மற்றவர் கூறியதும் இல்லை. வெறுவிலிகளாக மட்டுமே நாம் இருக்கின்றோம். இருக்கின்ற அற்ப சொற்பங்களும் சொற்ப விலைகளில் ஏ-9 கடந்து தென்பகுதிக்கு போகும் பரிதாபம்.பழைய செம்பு, பித்தளைச் சருவம், கமண்டலம், கெண்டி, நிலைகதவு, கோயில் வாகனங்கள், வண்டில்கள், அந்தக்காலத்துப் பாத்திரங்கள் என அனைத்தும் தராசில் நிறுத்து கிலோக் கணக்கில் விற்பனையாகின்றது.
நேற்றுக் கூட, இரண்டு வில்லு வண்டில்கள் லொறி மூலம் தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப் படுவதாக பேராசிரியர் ஒருவர் கவலையோடு தெரிவித்தார்.அந்த இரண்டு வில்லுவண்டில்களையும் விலைக்கு வேண்டிச் செல்வதாக தென்பகுதிக்கு எடுத்துச் செல்லும் அந்த சகோதரர்கள் தெரிவித்தார்கள்.
என்ன செய்வது! இதுதான் எங்கள் தலை விதி. அந்தக்காலத் தொழில் நுட்பத்தில் பித்தளையை அதிகமாகப் பயன்படுத்தி உருவாக்கிய வில்லு வண்டில் ஏ-9 கடந்து போவதைக் கண்டு வேதனைப்பட முடியுமே அன்றி, எங்கள் முன்னைய சொத்துக்களை கொள்வனவு செய்து அவற்றை பேணிப் பாதுகாக்கும் திட்டங்கள் எதுவுமில்லை. நிலைமை இதுவாகத் தொடருமாயின் எங்கள் வாழ்வியலின் அடையாளங்கள் எங்களை விட்டு எங்கோ காட்சிப் பொருளாக-பெறுமதி மிக்க பொருளாக அலங்கரிக்கப்படும்.
என்ன செய்வது! வாருங்கள் எங்கள் வர லாற்று விரும்பிகளே! கட்டியழுவோம்.அட, பழைய ஒப்பாரிக்கும் இப்போ பூரண தட்டுப் பாடு. வாருங்கள் ‘சிணுங்குவோம்’. இது தானே எங்கட லேட்டர்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக