தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்? என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழருடன் உடன்பாடுகள் செய்ததாக கூறி அவை சிங்கள மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வாறு உடன்பாடுகள் எவற்றிலும் யாரும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை.
ஆனால், தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்?
தமிழர்கள் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்ற எண்ணம் மறைய வேண்டுமானால் இந்த தேர்தலில் சிறுபான்மையினரும் பெரும்பான்மை இன மக்களும் தோளோடு தோள் நின்று சேர்ந்து இனத்துவேஷத்தை அழிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்ட நிர்வாக செயற்பாட்டு முறையை அறிமுகம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்கால நிலைவரம் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்விபரம் வருமாறு:
கேள்வி: மிகவும் தீர்க்கமான காலகட்டத்தில் நடைபெறும் இந்த ஜனாதிபதி தேர்தலை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? தமிழ் பேசும் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று புத்திஜீவி என்ற வகையில் நீங்கள் எண்ணுகின்றீர்கள்?
பதில் : இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் தாக்கம் பல வருடங்களுக்கு எம்மை பாதிக்கும். முக்கியமாக அடுத்த பொதுத் தேர்தலும் இவ்வருடம் நடக்கவிருக்கின்றது. அதன் பெறுபேறுகள் கூட இந்தத் தேர்தல் முடிவிலேயே தங்கியுள்ளன. ஆகவே தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
தமிழ் மக்களின் நிலைப்பாடு இதுவரை காலமும் இருந்ததுபோல் அமைய முடியாது. காரணம், ஆயுதம் ஏந்தியவர்கள் பின்னணியில் இருந்ததால் எமது சிந்தனைகள் ஜனநாயக அடிப்படையில் அமையாதிருந்தன. ஆயுதம் ஏந்தியவர்கள் சத்தியம் செய்து போரில் இறங்கியவர்கள்.
அவர்கள் ஒரேயொரு இலக்கை மட்டுமே முன்வைத்து போராடினர். அதன் காரணத்தால் அந்த இலக்குகளுக்கு குறைந்த எதனையுமே அவர்கள் ஏற்கவில்லை. ஏற்க முடியவுமில்லை.
அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறிய அரசியல் வாதிகளையும் விட்டுவைக்கவில்லை. இராணுவ சூழலில் தலைமைத்துவத்தின் சிந்தனைக்கு செவிமடுத்து அப்படியே நிறைவேற்றுவதே படிநிலையில் இருப்பவர்களின் கடமை.
இப்போது இந்நிலை மாறிவிட்டது. ஆயுதப்போராட்டம் ஓய்ந்துபோய் நிற்கின்றது. நாங்கள் அந்தப் போராட்டம் தொடங்கிய காலகட்டத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம். நாங்கள் ஜனநாயக அடிப்படையில் எவ்வாறு சிந்தித்து செயலாற்ற வேண்டுமோ அவ்வாறு செயலாற்ற வேண்டும். எங்களை தனிமைப்படுத்தி காரியங்கள் இயற்ற முடியாது. எம்மைப்போல் சிக்கல்களிலும் சிரமங்களிலும் சீரற்ற வாழ்க்கை முறையிலும் சிக்கித் தவிக்கும் மற்றைய மக்கள் கூட்டங்களுடன் இணைந்து செலாற்றினால்தான் எமக்கு விமோசனமுண்டு. குறிக்கோள்கள் இருக்கலாம். ஆனால் சூழலுக்கேற்றவாறு எம்மை தயார்படுத்திக் கொண்டு காரியத்தில் இறங்க வேண்டும். சில நேரங்களில் 100 சதவீத எதிர்பாப்புகளில் தற்போதைக்கு 30 சதவீதம் கிடைத்தாலும் அது போதுமானது.
அடுத்த தடவை பார்க்கலாம் என்ற மனோபாவம் வரவேண்டும். பலம் இருந்தவனால்தான் போட முடியும். மலையக மக்களுக்கு தொழிற்சங்க பலமிருந்தது. முஸ்லிம் சகோதரர்களுக்கு மத அடிப்படையிலான வெளிநாட்டு ஆதரவு இருந்தது. ஆனால், நாங்கள் ஆயுத பலத்தை நம்பினோம். அதன் பாவனை தடைபட்ட இந்த தருணத்தில் எங்கள் சிந்தனைகள் சூழலுக்கு ஏற்றவாறு மாற வேண்டும்.
கேள்வி: தேர்தலில் தமிழ்க்கட்சிகளின் பங்களிப்பு எவ்வாறு அமையவேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்: தமிழ் மக்களுக்கு தற்போது தேவையானது ஒற்றுமை என்ற ஆயுதமே. எம்மை நாமே விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. சுனாமிப் பேரலை வந்தபோது இராணுவத்தினரும் இயக்கப்போராளிகளும் சேர்ந்து பாதிப்படைந்த மக்களுக்கு உதவி புரிந்தனர். அதன் பின்னர் இருதரப்பு தலைமைத்துவங்களும் அந்த ஒற்றுமையை குறைகூறியதால் அது ஸ்தம்பித்தது. இன்று எமக்குள் பல உட்பூசல்கள், பிரச்சினைகள் இருக்கக்கூடும். ஆனாலும், எமது இனத்தின் வருங்காலத்தை முன்வைத்து எமது சிந்தனைகளை ஒற்றுமையின் பக்கம் திருப்ப வேண்டும்.
சென்ற தடவை நடைபெற்ற ஜனதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள், வெல்ல இருந்த ஒருவரை வாக்களிக்காது தோற்கடித்தார்கள். ஏன் இந்த முறை ஒற்றுமையாக நாம் சுட்டும் ஒருவர் தேர்தலில் வெல்ல எமது பங்களிப்பை நல்கக் கூடாது.
கேள்வி: தமிழ் பேசும் மக்கள் ஏன் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிக்கவேண்டும்?
பதில்: ஏனென்றால் எமது கெட்டியான ஆயுதத்தை நாமே வீசி எறிவதுபோல் எமது வாக்குகள் பயனற்று பாழாய்போய்விடும் என்பதால்தான். நாங்கள் எவ்வளவு பாடுபட்டாலும் ஒரு தமிழ் மகனோ ஏன் முஸ்லிம் கூடவோ தற்போதைய இலங்கையின் அரசியல் சூழலில் ஜனாதிபதியாக பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. தளபதி சரத் பொன்சேகா கூறியதுபோல், ஒருவேளை, 50 வருடங்களின் பின்னர் நாடு பிளவுபடாமல் இருந்தால் அது நடைபெற முடியும்.
ஆகவே எமது வாக்குப்பலத்தைக் காட்ட தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இருவரில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். அவர்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய தமிழர் கூட்டணியின் தலைமைத்துவம் தீர்மானிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய இடதுசாரி வேட்பாளர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சகோதரர் விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் என்ன என்ற சந்தேகம் எழக்கூடும். எனினும் சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குறைவாகும். அப்படிப்பட்ட ஒருவருக்கு வாக்களிப்பதாலும் நாங்கள் எமது வாக்கு ஆயுதத்தை பிரயோகிக்காது விட்டதாகவே கருதப்பட வேண்டியிருக்கும்.
வெளிநாடுகளுக்கோ சிங்கள மக்களுக்கோ தமிழன் அதிருப்தியை காட்டும் நேரம் இதுவல்ல. தமிழ் மக்களாலும் சேர்ந்து முடிவெடுத்து ஆட்சிகளை கவிழ்க்கலாம் அல்லது அரியாசனம் ஏற்றலாமென்று தமது பலத்தை எடுத்துக்காட்ட வேண்டிய தருணமே இதுவாகும். நாம் சிந்தித்து இந்த தேர்தலில் வாக்களிக்காது விட்டால் சில மாதங்களின் பின்னர் வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் சுயநலத்திற்கே வெற்றி கிடைக்கும்.
கேள்வி: எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்களிப்பதன் மூலம் நன்மை உள்ளதா?
பதில்: என்னையும் தமிழ் வேட்பாளராக முன்வரும்படி வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் கேட்டார்கள். நான் அதற்கு கூறிய பதில்கள் ஏற்கனவே உங்கள் பத்திரிகையில் பிரசுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மகன் ஒருவர் எவ்வளவு உயர்ந்த மனிதராக இருப்பினும் சிங்கள மக்களின் வாக்களிப்பில்தான் தேர்தலின் முடிவு தங்கியிருக்கின்றது. சிங்கள மக்கள் குறிப்பிட்ட தமிழருக்கு வாக்களிக்க முன்வராத நிலையில் அவர் தோல்வியையே தழுவுவார். தோல்வி நிச்சயம் என்று தெரிந்து கொண்டு தேர்தலில் நிற்பதால் எதனை உலகுக்கு எடுத்துக்காட்டப்பார்க்கிறார். தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள் என்றா?
சென்ற தடவை 22 பேர் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர். அப்போது காட்டாத ஒற்றுமையை இப்போது காட்டப்போகிறாரா? அதன் பயன் என்ன? ஜனாதிபதியாக வெற்றி பெறுபவர் தான் நினைத்ததையே செய்வார். மாறாக தமிழ் மக்களின் வாக்குகளினால் தான் அவர் வெற்றி பெற்றார் என்று எண்ணும் ஒருவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கு கேடு விளைவிக்கப் போகின்றார்?
கேள்வி: இருந்தபோதிலும் பெரும்பான்மையை சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து நாம் எமது உரிமைகளை பெற முடியும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில்: நிச்சயமாக தமிழர் கூட்டணி சுட்டும் ஒருவர் தமிழர்களின் வாக்கினால் ஜனாதிபதியானால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாரம்பரிய தமிழ் கட்சிகள் சுயநலமிகளின் பாதிப்பின்றி அரசியலில் ஈடுபட முடியும்.
கேள்வி: தமிழ் கட்சிகள் பெரும்பான்மை அரசாங்கங்களுடன் எதன் அடிப்படையில் இணைந்து செயற்படவேண்டும்? அதனை எவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகின்றீர்கள்?
பதில் : இந்த கேள்விக்கு முன்னரே பதில் தந்துவிட்டேன். ஒரு முறை காலஞ்சென்ற நீதியரசர் மார்க் பெர்னாண்டோவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒரு விடயத்தைப் பற்றி கூறுகையில், நான், சிறுபான்மை இனத்தவன் என்ற முறையில் அந்தச் சட்டத்தை என்னால் ஆதரிக்க முடியாது என்றேன். அதற்கு அவர் விக்னேஸ், நான் கூட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் தானே என்றார்.
அவர் கூற வந்தது, தான் ஒரு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர் என்றதால் தானும் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதையே ஆகும். இந்த தேர்தலில் சிறுபான்மை இனங்கள் பல ஒன்று சேர்வது மகிழ்ச்சியை தருகிறது.
இது வருங்காலத்தில் பல நன்மைகளை ஈட்டித்தரும். எமது செயற்பாடு முன்னெச்சரிக்கையான யதார்த்த பூர்வ செயற்பாடு. ஊரோடு ஒத்து வாழாதவனின் வாழ்க்கை என்றுமே மகிழ்வைத் தராது. எம் சார்பில் மற்றவர்கள் குரல் உயர்த்த வேண்டுமென்றால் பெரும்பான்மை இனத்தவருடனும் மற்றைய சிறுபான்மை இனத்தவருடனும் சுகமான உறவை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை தொடர்பில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்ற அடிப்படையில் உங்கள் பார்வை என்ன?
பதில் : ஒற்றுமை என்பது சேர, சோழ, பாண்டிய காலந்தொடக்கம் தமிழடையே அதான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், சில தடவைகளில் அவர்கள் சேர்ந்தது பற்றியும் சரித்திரம் உள்ளது.
ஒளவையார் ஒரு முறை அவர்களை சேர்த்துவைத்தார். ஆனால், பிரிந்திருக்கும் மக்களை சேர்க்கக்கூடிய பெரும் கருவி அவலமும் அல்லலுமே. ஒரு பாரிய எதிர்ப்புச் சக்தி எல்லோரையும் அழித்து விடும் என்று வந்தால் எமது வேற்றுமைகள் ஒற்றுமையாக மாறும். அவ்வாறான ஒரு தருணம் இன்று வந்துள்ளது. ஊழல், குடும்ப ஆட்சி, துவேஷ மனப்பான்மை போன்றவை இராஜ நடைபோடுகின்றன.
இன்று பலதையும் நாங்கள் தந்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்களிடம் இருந்து பறித்தெடுத்ததையே தருகின்றார்கள். உதாரணத்துக்கு, வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு முன்னர் வடக்கில் மின்சாரம் இருந்தது. ஏ9 வீதியில் போக்குவரத்து இருந்தது. ரயில் சேவை இருந்தது. மேலும் பல வசதிகள் இருந்தன. தமிழர்கள் தமது உரித்துக்களை கேட்கின்றார்கள் என்றதால்தான் இவற்றை முடக்கினார்கள், மூடினார்கள்.
தமிழ் மக்களை அல்லல்படுத்தி அவர்களை வழிக்குத் திருப்பலாம் என்ற எண்ணம் போலும். இவர்களுக்கு. இவ்வளவு உயிர்த்தியாகங்கள், செலவுகளின் பின் நாம் உங்களுக்கு தருகின்றோம் என்பவை முன்னர் எம்மிடம் இருந்தவற்றைத்தான்.
நான் உச்சநீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சந்தர்ப்பத்தில் எனக்களித்த உபசாரத்தின்போது, இதை இன்னொருவிதமாக கூறினேன். எமது கல்லூரி சிரேஷ்ட மாணவர்கள் எம்மிடமிருந்த மாபிள்களை பறித்தெடுத்து விட்டனர். நாங்கள் அவற்றை திருப்பிக்கேட்டபோது இதோ இதனை வைத்துக்கொள் என்று எம்மிடமிருந்து பறித்தெடுத்த மாபிள்களில் கால் பங்கை நீட்டுவார்கள். அவ்வாறு தான் இருக்கின்றது இன்றைய நிலை. எமக்கு தருவதாக கூறப்படுகின்ற யாவும் எமக்குரியவையே, எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டவையே.
மேலும், தமிழருடன் உடன்பாடுகள் செய்ததாக கூறி அவை சிங்கள மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வாறு உடன்பாடுகள் எவற்றிலும் யாரும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை. ஆனால், தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்?
தமிழர்கள் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்ற எண்ணம் மறைய வேண்டுமானால் இந்த தேர்தலில் சிறுபான்மையினரும் பெரும்பான்மை இன மக்களும் தோளோடு தோள் நின்று சேர்ந்து இனத்துவேஷத்தை அழிக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்ட நிர்வாக செயற்பாட்டு முறையை அறிமுகம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக