அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப் படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை, மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.
ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக