உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் – இன்டர் நெட்எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்" என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதி வேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக