இந்த காலத்தில் சாதாரண குறுந்தகடுகளின் விலையிலும் வீழ்ச்சி அவற்றில் எழுதும் கருவிகளின் விலையிலும் வீழ்ச்சி. கொஞ்ச காலத்துக்கு முன் எட்டாக்கனியாக புதுப்பெண்ணாக மினிக்கி கொண்டிருந்த டிவிடிகளும் இந்த காலத்தில் சகஜமாக மலிந்து விட்டன. டிவிடி எழுதிகளும் மிக மிக குறைவான விலைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. காலம் செல்ல செல்ல இந்த டிவிடி எனப்படும் டிஜிட்டல் வீடியோ (வெர்சடைல்) டிஸ்க்குகளும் மலிவாகி விடும்(இப்போது ஒருவர் வாங்கும் திறனுக்குள்ளே தான் இருக்கிறது. இருந்தாலும் சாதாரண சிடிக்களை ஒப்பிடும் போது டிவிடி விலை அதிகம்).
DVD+r, DVD-r, DVD+RW, DVD-RW என்று பலவடிவங்களில் டிவிடி டிஸ்குகள் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு என்ன வித்தியாசம் என்பதை விவாதிக்க அல்ல இந்த கட்டுரை. இந்த கால டிவிடி எழுதிகள் ஆக எல்லா வகை டிவிடிகளிலும் எழுதும் திறன் பெற்றுள்ளது. சாதாரணமான குறுந்தகடுகள் 700MB அல்லது 750MB கொள்ளளவு கொண்டதாக இருக்கும். ஆனால் பொதுவாக டிவிடி குறுந்தகடுகள் 4.7GB கொள்ளவு கொண்டதாக இருக்கும். மார்க்கெட்டில் இது ஏரளமாக கிடைக்கிறது. அதுவும் போக டிவிடியில் இரண்டு அடுக்கு (double layer) டிவிடி என்ற மற்றொரு வகை உண்டு. இந்த வகையில் 9.4GB-க்கு மேல் விசயங்களை ஒரே (பெருந்)தகடில் அடக்கி விடலாம். இதன் விலையும் அதிகம். மார்க்கெட்டிலும் குறைவாக தான் கிடைக்கிறது.
இப்போது ஒரிஜினல் டிவிடியில் இருக்கும் திரைப்படங்களை நகல் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் இரண்டு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.
1. முதலாவது பெரும்பான்மையான படங்கள் இரண்டு அடுக்கு டிவிடியில் தான் வெளியிடப்படுகிறது. அதன் கொள்ளளவு 9.4GB-க்கு மேல் இருப்பதால் உங்களிடம் இருக்கும் 4.7GB சாதாரண டிவிடி குறுந்தகடில் அடுக்குவது கடினம்.
2. ஒரிஜினல் சினிமா டிவிடிகள் சூட்சும சூத்திரத்தில் (encryption) உள்ளடக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனால் டிவிடியில் வரும் விசயங்களை வன் தகடில் நகல் எடுக்கவோ, இல்லை இன்னொரு டிவிடியில் நேரடி நகல் எடுக்கவோ முடியாது.
மேல் சொன்ன டிவிடி நகல் பிரச்சனைகளுக்கு மென்பொருள் தான் தீர்வு கொடுக்க வேண்டும். நான் பயன்படுத்துகிற வரையில் DVD shrink என்ற மென்பொருள் அருமையாக இருக்கிறது. DVD Shrink பற்றிய சின்ன விளக்கம்.
1. சாதரணமாக எல்லா சினிமா டிவிடிகளிலும் மெயின் சினிமா போக, அந்த படம் எடுக்கப்பட்டது எப்படி? இயக்குநரின் செவ்வி, அது போக ட்ரெய்லர்கள் சில சமயம் கேம்கள் என பலவிசயங்களும் இணைக்கப்பட்டிருக்கும். DVD shrink மென்பொருள் உங்களுக்கு தேவையான தலைப்புகளை(title) மட்டும் நகல் எடுத்துக் கொள்ள உதவுகிறது. தேவையில்லாததை விட்டு விடும் போது சேமிப்பு கொள்ளளவும் குறைவாகவே தேவைப்படும்.
2. ஒரு வேளை உங்களுக்கு சினிமா டிவிடியில் இருக்கும் எல்லா விசயங்களும் வேண்டுமென்றாலும் இந்த மென்பொருள் 4.7GB அளவுக்கு படத்தை சுருக்கிக் கொடுக்கும். சுருக்கும் அல்காரிதத்தால் (compression algorithm) படத்தின் குவாலிட்டி அடிபட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த மென்பொருளில் அருமையான அல்காரிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான் இந்த மென்பொருளை அனுபவித்த வரையில் படத்தின் குவாலிட்டியில் சொல்லத் தகுந்த தரக்குறைவு ஏற்ப்பட்டதில்லை.
3. இந்த மென்பொருளின் உள்ளே கட்டமைக்கப்பட்டுள்ள சூட்சும அவிழி (decrypt algorithm) அல்காரிதம் அருமை. எல்லாவித டிவிடிகளையும் கண்டுக்கொண்டு தடைகளை உடைக்கிறது.
4. அது போக டிவிடி சினிமா தகடுகளில் பிராந்திய (Region) பிரச்சனை ஒன்று இருக்கிறது. சில பிராந்திய டிவிடி படங்களை சில டிவிடி ப்ளேயர்கள் கண்டுக் கொள்வதில்லை.இந்த மென்பொருள் Region Free-ஆக மாற்றுவதற்கும் உதவுகிறது.
5. வன் தகடில் உங்கள் தேவையான அளவுக்கு சுருக்கி பிறகு 4.7GB அளவுள்ள டிவிடி குறுந்தகடில் எழுதுவதற்கு உங்களுக்கு நீரோ போன்ற எழுதி மென்பொருள்கள் தேவைப்படும்.
டிவிடி வட்டுக்களை கண்டுக் கொள்ள கட்டாயம் உங்களிடம் டிவிடி ட்ரைவ் இருக்கவேண்டும். உங்களிடம் பவர் புஃல் ஆன கணி இருந்தால் மட்டுமே சீக்கிரம் வேலை முடியும். என்னுடைய 2.4GHz , 768MB கணியில் ஒரு சினிமா டிவியை நகல் எடுக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக DVD shrink மென்பொருள் இலவசம். அதை இங்கிருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
http://www.dvdshrink.org/where.html
வேறும் 1.04MB அளவே உள்ள நிறுவி (setup) . பயன்பாடு பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
http://www.dvdshrink.info/guides.php
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக