ஓடும் இயந்திரங்களுடன் தானும் ஒரு இயந்திரமாகவே மாறிக் களைத்து போகும் மனிதன்; விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் - இவற்றோடு பின்னிப் பிணைந்து நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருக்கும் மனித குலத்தின் அபிவிருத்தி புதியதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது.
அறிவியில்,தொழில்நுட்பம், நாகரிகம் என அனைத்துத் துறைகளும் புதுமைகள் படைக்கும் களங்களாக மாறியிருக்கும் இக்காலகட்டத்தில் இவை எல்லாவற்றுக்கும் சவாலாக விளங்கும் விடயங்களும் இருக்கவே செய்கின்றன.
அதில் பிரதானமாக சொல்லப்படுபவற்றில் முக்கிய இடம் வகிப்பது `எயிட்ஸ்` எனப்படும் உயிர்க்கொல்லி நோய் என உறுதியாகக் கூறலாம்.
இயற்கையை மனிதன் வெல்ல முடியாது என்பது போல், இந்தக் கொடிய நோயையும் வெற்றிகொள்ள முடியாமல் உலகம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
வேற்றுக்கிரகங்களில் புகுந்து சாதனை செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானத்தால், மனிதனுக்குள் புகுந்து உயிர்க்கொலை செய்யும் இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லையே...?
ஆம்! சர்வதேச எயிட்ஸ் தினமான இன்று இந்த நோய் எந்தளவுக்கு உலகப்பரம்பலில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் பின்விளைவுகளால் உலகம் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பற்றியும் கட்டாயம் தெரிந்தாக வேண்டும்.
33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய் பீடிப்பு
உலகத்தில் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, வயதுவந்த சுமார் 31.3 மில்லியன் பேர் இந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 15.7 மில்லியன் பெண்களும் அடங்குவதாக அக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதைவிட கவலைதரக் கூடிய விடயமாக கொள்ளப்படுவது எதுவெனின், காரணம் எதுவுமின்றி 2.1 மில்லியன் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதுதான்.
2008 ஆம் ஆண்டில் மாத்திரம் 2.7 மில் லியன் மக்கள் புதிதாக இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதுடன் 4 லட்சத்து 30ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியன் மக்கள் கடந்த 2008ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களும் இந்நோயால் மரணமாகியுள்ளனர்.
எனினும் கடந்த எட்டு ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டு 17 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.
இலங்கையைப் பொருத்தவரை அண்ணளவாக 15 வயதுக்கு மேற்பட்ட 4000 பேரும் 15 வயதுக்குக் குறைந்த 50 பேரும் எச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2008 ஆம் ஆண்டில் 1023 பேர் எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2009 ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் மாத்திரம் 1127 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்களிலும் புரட்சியை ஏற்படுத்தியதாக 20ஆம் நூற்றாண்டு பிரஸ்தாபிக்கப்படுகிறது. அணுவாயுதம் முதல் விண்வெளிப் பயணம் வரை காத்திரமான பல மாற்றங்கள் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கும்...
எவ்வாறாயினும் 20 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் உலக மருத்துவத் துறையை கலங்க வைத்து, இன்றுவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோயாக எயிட்ஸ் காணப்படுகிறது.
எயிட்ஸ் என்ற நோய்க்கு எச்.ஐ.வி. என்ற வைரஸ்தான் காரணம் என முறையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் 1981 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நோய் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்துள்ளது. 1981 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை 25 மில்லியன் மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.
பொதுவாக, உடலுறவு கொள்ளுதலில் மாத்திரமே எச்ஐவி தொற்றுவதாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகவும் அச்சம் கொள்கிறார்கள்.
உடலுறவினால் எச்ஐவி தொற்று உண்டாவது பிரதான காரணமாக உள்ளபோதிலும் அதுமட்டும் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. ஓரினச் சேர்க்கை, இரத்தம் பரிமாறப்படுதலினூடாக பரவுதல் மற்றும் தாய் சேய் உறவினூடாக தொற்றுதல் போன்ற ஏனைய காரணங்களும் உண்டு.
இந்த வைரஸ் பீடிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதாலோ நோய் தொற்றி விடுவதில்லை.
ஒருவரின் உடல் திரவங்கள் மற்றொருவரின் உடல் திரவத்துடன் சேரும்போது இக்கிருமி பரவுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால்தான் உடலுறவை பிரதானப்படுத்திப் பார்க்கிறது உலகம்.
பாதுகாப்பற்ற உடலுறவு முறைகள், ஈடுபாடுகள் என்பன இந்த வைரஸை பரிமாற்றம் செய்து விடுகின்றன. அதனால் ஏற்படும் பின்விளைவு தான் ஒரு தனிமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக மரணம் வரை கொண்டு செல்கிறது.
எச்ஐவி எனும் வைரஸ் மனித உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மெதுவாக குறைக்கிறது. அதனால், ஈடுசெய்ய முடியாத பல்வேறு நோய்களால், பீடிக்கப்படும்போது அவற்றை எதிர்க்கக் கூடிய திரவச் சுரப்புகள் இன்றி மரணம் நேரிடுகிறது.
இந்தத் தொற்றுக்கு உள்ளாகிய நபர் இன்னும் பலருடன் உடலுறவுச் சேர்க்கையில் ஈடுபடுவதனால் மேலும் பலருக்கு அது பரவ ஆரம்பிக்கின்றது.
மாபெரும் சவால்
எனவேதான், உலகம் இன்று மாபெரும் சவால் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது.
இரத்தத்தில் 10 வீதம் எச்ஐவி அதிகரிப்பு ஏற்படுமாயின் அதனால் 81 வீதம் நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படின் இந்த உயிர்க்கொல்லி நோய் மரணத்தை மேலும் துரிதப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எச்ஐவியை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அதனை நீண்டகால நோக்கில் குணமாக்கக் கூடியதாகவோ அல்லது தொடர்ச்சியான ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாகவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
போதியளவு விழிப்புணர்ச்சி இல்லாமல் இந்த நோயைத் தொடர்வதற்கு வழி செய்யப்படுமானால், குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் பாரியதொரு சனத்தொகை அழிவு ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.
நடைமுறை வாழ்வில் தன்னைத் தானே காத்துக்கொள்வதுதான் சிறந்த மருந்து என்றும் நம்பிக்கையுடனான உறவுகளை வளர்த்துக்கொள்ளுதலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுதலும் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் மருத்துவத்துறை, உலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது.
முழு உலகத்தையும் அழிப்பதற்கு மேற்குலகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆயுதம் `எயிட்ஸ்` தான் என்றே கூறப்படுகிறது. மனித இனத்தை மெதுமெதுவாக அழித்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் எனும் அரக்கனை அழிக்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுதலே காலத்தின் தேவையாகும்.
thanks virakesari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக