குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல . ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.
ஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.
இதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.
இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக